ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Monday, 16 February 2015

17-02-2015 மகா சிவராத்திரி விழா!17-02-2015 

மகா சிவராத்திரி விழா!


நாளை , மாலை முதல் அதிகாலை வரை ,மகா சிவராத்திரி விழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெறும். 

அடியார்கள் வருக! சிவனருள் பெறுக! 

ஓம் நமசிவாய! 

சிவ சிவ!

Sunday, 15 February 2015

கூந்தலூர் – திருத்தல வரலாறு.

       
கூந்தலூர் – திருத்தல வரலாறு.


           கூந்தலூர் திருத்தலம், இன்றும் மாண்பு குறையா பழங்கால சிறப்புமிக்க சிற்றூராகும். சுமார் 1600 வருடங்கள் கலாச்சார பாரம்பரியமிக்க தொன்மையான சிற்றூர் கூந்தலூர் என்பதை, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கூந்தலூர் கல்வெட்டு ஆராய்ச்சிக்குறிப்புகள் முலம் நாம் அறியமுடிகிறது.

          1600 ஆண்டுகள் என்பது மிக எளிதில் நாம் இங்கே குறிப்பிட்டுவிட்டாலும் , அதன் தொன்மையும் சிறப்பும் நாம் அளவிட முடியாத வரலாற்று நிகழ்வுகளும், பழந்தமிழர் வாழ்வியல் நெறிகளும் இணைந்த வரலாற்றுச் சுவடுகளாகும். கிட்டத்தட்ட நமக்கு 33 தலைமுறைகளின் மூத்த முன்னோர் வாழ்ந்த காலகட்டம் அது.

          நகரங்கள் , சிற்றூர்கள் அருகியிருந்த அக்காலகட்டத்தில், ஐவகை நிலங்களான குறிஞ்சி,நெய்தல்,மருதம்,முல்லை மற்றும் பாலை என்ற நிலங்களின் வகைகேற்ப அமைந்த , மக்கள் அதிகம் பயன்படுத்தாத சிறுவனங்களே, மிக அதிக பரப்பளவில் தமிழ்நாடெங்கும் விரவி இருந்தன.

         சிற்றூர் அல்லது நகரம் ஒட்டிய அவ்வனங்களில் , மரங்களின் கீழ் தெய்வ உருவங்களை மரம் அல்லது கருங்கல் மூலம் நடுதறி வடிவில் நட்டு , மக்கள் வழிபட்டு வந்தனர். இப்படியொரு வகையில்தான் , கூந்தலூர் சிற்றூரின் அருகில் இருந்த நாவல் மர வனத்தில், நாவல் மரத்தின் கீழே சிவலிங்க உருவத்தை மரத்தாலோ அல்லது கல்லாலோ நடுதறி வடிவில் உருவாக்கி நட்டுவைத்து ஜம்புகாரணேஸ்வரர் என்ற திருப்பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். 

        ஜம்புகாரண்யம் என்றால் நாவல்மரக்காடு எனப்பொருள். பஞ்சபூத வடிவில் இறைவனை மக்கள் வழிபட ஆரம்பித்தபோது பஞ்சபூதங்களில் நீர் வடிவைக் குறிப்பவராக , நாவல்மரக்காட்டில் வணங்கிவரும் சிவலிங்க வடிவை ஜம்புகாரணேஸ்வரர் எனத் திருப்பெயரிட்டு வணங்கிவந்தனர்.

        இத்தகைய காலவெளியில், பேரரசர்கள் ஆட்சிக்காலங்களில் சிற்றூரை ஒட்டிய இவ்வனங்கள் சீரமைக்கப்பட்டு மக்கள் வசிக்கத்தேவையான அடிப்படை ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன. இன்று ஸ்மார்ட் சிட்டி என அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய புதிய குடியிருப்புப்பகுதிகளை, பெரு நகரங்களுக்கு வெளியே உருவாக்குகிறார்களே , அதுபோல.

      மேலும் சீரமைக்கப்பட்ட அவ்வனங்கள் அவற்றின் தன்மைப்பெயரால் அழைக்கப்பட்டு வந்தது, அவ்வகையில் நாவல்மரங்கள் சூழ்ந்த அவ்வனம் ஆரம்ப கால கட்டத்தில் நாவற்காடு எனத்தமிழிலும் , ஜம்புகாரண்யம் என வடமொழியிலும் அழைக்கப்பட்டுவந்திருக்கிறது. பின்னாளில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கூந்தலூர் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

       1500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை ஆண்ட சைவநெறி சார்ந்த பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில், கூந்தலூர் நாவல்மரவனத்தில் பழந்தமிழ் முன்னோர் வழிபட்டுவந்த எம்பெருமான் சிவபெருமானை, நம் மூதாதையர் ஜம்புகாரணேஸ்வரர் எனத்திருப்பெயரிட்டு அழைத்த ஈச மகேசனுக்கு , பல்லவர்கள் பெருங்கற்கோவில் அவ்விடத்தில் அமைத்து விமரிசையாக விழாக்கள் எடுத்து வணங்கிவந்தனர்.

        1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கி.பி. 600 ஆண்டுகளின் காலகட்டத்தில், மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில், 80 வயதுவரை வாழ்ந்திருந்தார் என நம்பப்படும் சைவசமயக்குரவர் நால்வரில் திருநாவுக்கரசர் என அழைக்கப்படும் அப்பரடிகள், கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரரை கண்டு வணங்கி தொழுத குறிப்புகள் சைவத்திருமறையாம் தேவாரத்தில், ஆறாம் திருமுறை சேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் 9” வது பாடலாக நமக்கு காணக்கிடைக்கிறது.          திருக்கோவில் மூலவர் திருமேனியும் பல்லவர் கால நடுதறி எனும் வகையில் அமைந்த இலிங்க வடிவமாகும். மேலும் திருக்கோவிலில் தற்போது  பிரகாரத்தில் அமைந்திருக்கும் 16 பட்டை தாரா லிங்கமும், லிங்கோத்பவருக்கு எதிரே பிரகாரத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் திருவடிவமும் பல்லவர் கால கலை நுணுக்கங்களுடனே அமைந்திருப்பதும் ஆலயத்தின் பழந்தொன்மையை உணர்த்தும் சிறப்புகளாகும். மேலும் முருகப்பெருமான் ஞானத்தை உபதேசிக்கும் மூர்த்தியாகத்திகழ்வதால், ஒரு கரத்தில் ஓலைச்சுவடியும் மற்றொரு கரத்தில் உருத்திராட்சமணிமாலையும் கொண்டு திகழ்கிறார்.

திண்டீச்சரங் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற்றேமம் சேறை 
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு 
அண்டர் தொழும் அதிரை வீரட்டானம் ஐயாறு சோகந்தி ஆமாத்தூருங் 
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காணலாமே.
                                                                                                                                               -  அப்பர் - 6 - 70 – 9

          சைவத்திருமறையாம் தேவாரப்பாடல்கள் மூலம் , 1600 ஆண்டுகளுக்கு முன்பே கூந்தலூர் எனும் பெயர் இவ்வூருக்கு விளங்கி வருவதை அறிய முடிகிறதல்லவா!

        மேலும் 1600 ஆண்டுகால பழந்தமிழ்ப்பெயரே, இவ்வூருக்கு இன்றளவும் நிலைத்து விளங்கி வருவது சிவனின் திருவருள்தானே!


       பல்லவர் ஆட்சிக்காலத்தில் இவ்வாறு சிறப்புற்று விளங்கிய கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருத்தலம் , சோழர்கள் ஆட்சிக்காலத்தில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, பொலிவுடன் திகழ்ந்த வரலாறும், பின்னர் விஜயநகரப்பேரரசின் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கட்டுமானத்திருப்பணிகள் செய்யப்பட்டு புகழ்மிக்க சைவத்திருத்தலமாக விளங்கிய வரலாற்றினையும் தொடர்ந்து பதிவில் காணலாம்.
     
   சைவ சமயத்தின் பொற்காலம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் சோழப்பேரரசின்  ஆட்சிக்காலத்தில், கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர்  திருத்தலம் கற்கோவிலாக  முற்றிலும்  புதுப்பிக்கப்பட்டு,  விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. 


          திருக்கோவில் பிரகாரத்தில் பத்மபீட வேலைப்பாடு களுடன்கூடிய இலிங்கத்திருமேனி, நான்கு கரங்களுடன்  நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும்  அம்பாள்  திருவுருவம் மட்டுமல்லாது, விநாயகர், பைரவர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் மற்றும் நந்திகேஸ்வரர் திருவுருவங்களும் பண்டைய சோழர்காலத்திலேயே வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு விமரிசையாக  வழிபடப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. 

                    மேலும், சோழபேரரசின்   பொற்கால ஆட்சிக்காலமான  இராஜராஜ சோழர் ஆட்சிக்காலத்தில், சிறந்த ஆட்சி நிர்வாகம் செய்ய வசதியாக பரந்துவிரிந்த மிகப்பெரும் எல்லைகள் கொண்டிருந்த  சோழமண்டலம், புவியியல் அமைப்புரீதியாக   மிகத் துல்லியமாக அளக்கப்பட்டு, பல வள நாடுகளாகப் பிரிக்கப்பட்டு   அவ்வளநாடுகள் பல கூற்றங்கள் மற்றும் நாடுகள் எனும் உட்பிரிவுகளாகவும்,  அக்கூற்றங்கள் மற்றும் நாடுகளின் உட்பிரிவுகளாக ஊர்களும், பிடாகைகளும் அடங்கியிருக்குமாறு உருவாக்கப்பட்டன.

          இராஜராஜ சோழர் ஆட்சிக்காலம் , ஒருவகையில்  இன்றைய நமது இந்திய ஜனநாயக அமைப்பின் முன்னோடியாகக்   கருதக்காரணமான,   குடவோலை முறை மூலம் மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சோழ மண்டலத்தின் உட்பிரிவுகளில், நிர்வாகிகளாக செயல்பட வைத்த சிறப்புமிக்க ஆட்சிக்காலமாகும்.
     
          அப்படிப் பிரிக்கப்பட்ட ஒரு வளநாடுதான் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடமுருட்டி ஆறு, அரசலாறு இவற்றினை எல்லைகளாகக்கொண்டு , அவ்விரு ஆறு களுக்கிடைப்பட்ட  நிலப்பரப்பினைக் கொண்டதாகும்.

      ஷத்திரிய சிகாமணி வளநாடு என அழைக்கப்பட்ட அவ் வளநாட்டில்,  அளநாடு , முளையூர் நாடு, தேவூர் நாடு, திருவாரூர் நாடு , திருநறையூர் நாடு உள்ளிட்ட 11 உட்பிரிவுகள் அடங்கியிருந்தன. அவற்றுள் ஒன்றான திருநறையூர் நாட்டில் திருத்தல புகழ்மிக்க ஒரு ஊராக, ஜம்புகாரனேஸ்வரர் உறையும் கூந்தலூர் திகழ்ந்து வந்தது.

   கூந்தலூர் திருக்கோவில் குறிப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கற்கோவிலாக மாற்றப்பட்டு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்தும் வண்ணம், திருக்கோவிலின் பிரகாரத்தில் மூன்றடி உயரத்தில் நேர்த்தியான தாடி மீசை கோலத்தில் இருகரம் கூப்பி, ஜம்புகாரணேஸ்வரரை வணங்கி நிற்கும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் திருவுருவ சிலை காணப்படுகிறது.

      பல்லவர், சோழர் ஆட்சிக்காலத்திய இக்கற்கோவிலை , விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில், திருப்பணிகள்  பல சிறப்புறச்செய்து , புதிய கற்கோவிலாக உருவாக்கியுள்ளனர்.

       தற்போது காணப்படும் கூந்தலூர் திருக்கோவில் கட்டுமானம், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில்  உருவாக்கப்பட்டதே ஆகும். மேலும் கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி,பிரம்மா,லிங்கோத்பவர்,துர்க்கை உள்ளிட்ட தெய்வத் திருமேனிகள், விஜயநகரப்பேரரசின் ஆட்சிக்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

         திருக்கோவிலின் நுழைவாயிலில் அமைந்து அருள்பாலித்து  கொண்டிருக்கும் வரம் தரும் விநாயகர் எழுந்தருளியிருக்கும் தனிசந்நதியும்,  வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தனித்திருசந்நதியும் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே ஆகும்.

     இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் 1992 ஆண்டின் பதிவு எண்  538 கொண்ட கிருஷ்ணதேவராயர் காலத்திய  இத்திருக்கோவிலின் முதல் கல்வெட்டு, தமிழ் ஆண்டான  சக ஆண்டு 1441ல் உண்டாக்கப்பட்டதாகும். இதன் ஆங்கில ஆண்டு கி.பி. 1519.

           திருப்பணிச்சிவன் அம்பலத்தாடியார்  எனும் சிவனடியார் வேண்டுகாளின்படி, விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவமகராயர் ,முன்னர் கூந்தலூர்  திருக்கோவிலுக்கு சொந்தமாக இருந்த 5  வேலி  நிலத்தை வரியில்லாத நிலமாக மாற்றி , எம்பெருமான் கூந்தலூர் திருத்தம்பிரான் திருக்காட்டுறைவார், மகத்திருநாள் பூசைகளுக்காகவும், திருப்பணிகளுக்காகவும், மீண்டும் அந்நிலத்தை கூந்தலூர்  உடைய திருக்காட்டுறைவார் எனப்படும்   கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஒப்படைக்க   உத்தரவிட்ட நிகழ்வை விளக்குகிறது.

400 ஆண்டுகளுக்கு முற்பட்ட 539 எண் கொண்ட இரண்டாம் கல்வெட்டு , வினைதீர்த்த முதலியார் என்பவர் ஈஸ்வர அய்யர் என்பவர் கேட்டுகொண்டதற்கிணங்க , திருக்கோவிலின் நான்கு வீதிகளிலும் உள்ள நிலங்களை திருக்கோவிலுக்கு அளித்ததை குறிப்பிடுகிறது.

        இக்காலகட்டத்திலேதான் , அருணகிரிநாதரும் கூந்தலூரில் உறையும் வள்ளி தேவசேனா சமேத குமரகுருபரன் எனும் முருகப்பெருமானைப்போற்றி, 'கூந்தலூருறை எம்பெருமானே ' என முடியும் திருப்புகழை அருளியிருக்கிறார்.

கூந்தலூர் திருத்தலத்தைப்பற்றிய இரண்டு கல்வெட்டுகளே நமக்கு தற்போது காணக்கிடைத்தாலும், எண்ணிறந்த தொன்மைமிக்க பழந்தமிழ் நன்னூல் சுவடிகள் காலப்போக்கில் மறைந்துபோனதுபோல, கூந்தலூரின் பெருமையைப்போற்றும் பல்வேறு சுவடிகள்,கல்வெட்டுகள் மறைந்துபோயிருக்கலாம்.

       ஆயினும், 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலங்களில் அப்பேரரசர்களால் போற்றப்பட்டு சீரோடும் , சிறப்போடும் திருப்பணிகள்திருவிழாக்கள் பல கண்டு , பழந்தமிழர் போற்றி வணங்கிய , பெரும்புகழ்கொண்டு விளங்கிய  கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோவில் இன்றும்  பண்டைய பெருமைகளைத் தாங்கியபடி  , தற்காலப் புரவலர்களின் பற்றுதலால், ஈடுபாட்டால், சேவைகளால்திருப்பணிகள் யாவும் செவ்வனே சிறப்புடன் நிகழ்த்தப்பெற்று பழமைமாறாப்  புதுப்பொலிவுடன், நாடி வரும் அடியார்க்கெல்லாம் என்றும் போல நலமே அளித்து , அடியார்அனைவரையும் காத்துவருகிறது.

               1500 ஆண்டுகால தமிழர் வரலாற்றினை சுமந்தபடி , திருநாவுக்கரசரின் சேத்திரக்கொவை பாடல் கொண்டும்  , அருணகிரிநாதரின் திருப்புகழ் கொண்டும் திகழும் கூந்தலூர் திருத்தலம், அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புத ஆற்றல் அடங்கிய பழங்கால திருத்தலம்!


கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோவில் தொழுவோம்! 

சிவ தரிசன பேரின்பப்பேறினைப்  பெறுவோம்!  

ஓம் நமசிவாய!  

சிவ சிவ!